அசாம் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஜோர்ஹாட் விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று (மார்ச்.5) மாலை சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் பயிற்சிக்காக புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதாவது இரவு 7.42 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, விமானத்தைத் தேடும் பணியில் விமானப் படை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கார்பி அங்கிலாங் மாவட்டத்தில் உள்ள பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்து கிடந்தது தெரிய வந்தது. அந்த பகுதிக்கும், விமானப் படைத் தளத்திற்கும் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவு என்று இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மீட்புப் பணியில் விமானப் படை வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன. எனினும், விமானத்தை இயக்கிய இரு விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து இந்திய விமானப் படை உயர் அதிகாரிகள் தீவிர தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர். இந்தநிலையில், சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானத்தை இயக்கிய இரு விமானிகளும் உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை தனது அதிகாரப்பூர்வ் எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ” சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமான விபத்தில் லீடர் அனுஜ் மற்றும் லெப்டினன்ட் பூர்வேஷ் துராக்கர் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்திய விமானப் படையின் அனைத்துப் பணியாளர்கள் சார்பில் அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான நேரத்தில் அவர்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது. சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் எதனால் விபத்துக்குள்ளானது? என்பது குறித்து உயர் விமானப் படை அதிகாரிகள் அடங்கிய குழுவை இந்திய விமானப் படை அமைத்துள்ளதாகவும், விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.