சபரிமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இந்த மண்டல சீசனில் நேற்று தான் பக்தர்கள் வருகை மிக அதிகமாக காணப்பட்டது. நேற்று தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் 85,318 பக்தர்கள் முன்பதிவு செய்து இருந்தனர். இவர்களில் நேற்று இரவு வரை 84 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் நிலக்கல், பம்பை, திருவனந்தபுரம், எருமேலி உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்த 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் தரிசனம் செய்தனர்.
எனவே, நேற்று 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் குவிந்ததை தொடர்ந்து அதிகாலை முதல் இரவு வரை 18ம் படி முன்பு பக்தர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது. நெய்யபிஷேகம் செய்வதற்கும், அப்பம் -அரவணை பிரசாதம் வாங்குவதற்கும் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். இன்றும் அதிகாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகமாக இருக்கும் என்பதால் சபரிமலையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.