கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன், தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளதாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வாக்குப்பதிவுக்கு முன் கடைசி 48 மணி நேரம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வரம்புக்கு அதிகமாக செலவு செய்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி பி. டி. ஆஷா விசாரித்தார். இந்த நிலையில் தனக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை என்று கூறி, தி.மு.க வேட்பாளர் ஆண்டி அம்பலம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நத்தம் விஸ்வநாதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆஷா, தேர்தல் வழக்கை விசாரிக்க போதுமான காரணங்கள் உள்ளதாக கூறி, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.