திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி கோயில் அடிமனை பிரச்சனை குறித்து நடவடிக்கை கோரி முதல் அமைச்சருக்கு மனு…
திருச்சி திருவானைக்கோவில் பர்மா காலனியை சேர்ந்த எம்.மாரி என்கிற பத்மநாபன் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர்,
இந்து சமய அறநிலைத்துறை ஆணையர், திருச்சி மாவட்ட கலெக்டர், ஸ்ரீரங்கம் சார் பதிவாளர், மாவட்ட வருவாய் அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர், உதவி ஆணையர் ஸ்ரீரங்கம் தாசில்தார் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனது மனைவி விஜயலட்சுமி திருச்சி மாநகராட்சி 4-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஆவார். அதன் அடிப்படையில் பொதுமக்கள் நலன் கருதியும், பொதுநல தொண்டு செய்வதிலும் நாங்கள் ஆர்வமாக இருந்து வருகிறோம். திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலின் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வரும் திருவானைக்கோவில் இடத்தை சுற்றியுள்ள காலி மனைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல்வெளிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உண்டான சுமார் 100க்கும் மேற்பட்ட சர்வே எண்கள் உள்ள இடமானது கோவிலுக்கு சொந்தமானது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக மேற்கூறிய இடங்களில் வசிப்பவர்கள் தங்களுடைய இடத்தினை வேறு நபருக்கு கிரயம் கொடுக்க முடியாமலும், கிரயம் பெற முடியாமலும், வங்கியில் வீட்டுக் கடன் பெற முடியாமலும் கஷ்டமான சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளார்கள்.
மேலும், நாங்கள் சுயமாக சம்பாதித்து கிரையம் பெற்ற சொத்தினை எங்களுடைய வாரிசு தாரர்களின் பெயர்களுக்கு மாற்றம் செய்ய முடியாமலும் தவித்து வருகிறோம். நாங்கள் எங்களது சொத்தினை கிரையம் பெற்ற நாளிலிருந்து அரசுக்கு உண்டான வீட்டு வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, தொழில் வரி மற்றும் மின்சார கட்டணம் ஆகியவைகளை முறையாக செலுத்தி வருகின்றோம். ஆகவே, திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் செயல் அலுவலர் பிறப்பித்து திருச்சி ஸ்ரீரங்கம் சார் பதிவாளருக்கு அனுப்பிய ந.க.எண் 234/1433/ அ.4, நாள்:25-09-2023 தேதி இட்ட செயல்முறை உத்தரவை ரத்து செய்து, அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள சர்வே எண்களில் வசிக்கும் பொது மக்களாகிய எங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களை பரிசீலனை செய்தும், கோயில் ஆவணங்களை பரிசீலனை செய்தும் எங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை கிரையம் பெறுவதற்கும், கொடுப்பதற்கும் மற்றும் பத்திர பதிவுகள் செய்வதற்கும் வழிவகை செய்து எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்நிலையில், திருவானைக்கோவில் அடிமனை உரிமை மீட்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருவானைக்கோவில் சன்னதி வீதியில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் சத்திரத்தில் கடந்த 09-02-2024( வெள்ளிக்கிழமை)நடைபெற்றது. கூட்டத்தில், 5-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ்.முத்துக்குமார், திருவானைக்கோவில் அடிமனை உரிமை மீட்பு குழு சார்பாக எம்.மாரி(எ)பத்மநாபன், சிறப்பு அழைப்பாளராக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலுமகேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், திருவானைக்கோவில் ஜெம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவிஆணையர்/செயல் அலுவலர் கடந்த 25.09.2023ம் தேதி அன்று ஸ்ரீரங்கம் சார் பதிவாளருக்கு அனுப்பிய ந.க.எண். 234/1433/அ4 என்ற செயல்முறை உத்தரவை ரத்து செய்யகோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் விஜயலெட்சுமி, கனகராஜ் மற்றும் டைமன்.திருப்பதி, கலைமணி, காமராஜ், . வெங்கடேசன், ஐயப்பன், தீட்சதர்.பாலு, ஹரிஹரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அறங்காவலர் ராஜ் நன்றி கூறினார். மேலும், அடிமனை வாழ்வாதார உரிமை பிரச்சினைக்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி கேட்டு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இன்று (13-02-2024) மனு அளிக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.