திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளும் அதிக அளவில் உள்ளன. துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை வரை உள்ள திருச்சி சாலையானது மிகவும் குறுகலான பாதையாகும். இப்பகுதியில் உள்ள கடைகளின் முன்பு இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன.மேலும், இங்குள்ள கடைகளுக்கு வெளியூரில் இருந்து ரெகுலர் சர்வீஸ் லாரிகள் மூலம் பொருட்கள் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன. இந்த கனரக வாகனங்கள் நேரங்காலம் இன்றி தங்கள் இஷ்டம் போல் நடு வழியிலேயே நிறுத்திவிட்டு பொருட்களை இறக்குவதால் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும், வெளியூரிலிருந்து துறையூர் நகருக்கு வரும் பேருந்துகளும் போக்குவரத்து நெரிசல் சிக்கி பல மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், ஒரே வழித்தடத்தில் முன்னால் நிற்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கும், பின்னால் நிற்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்படுகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே, மேற்கண்ட பகுதியில் கனரக வாகனங்கள் குறித்த நேரத்துக்கு மட்டும் வந்து பொருட்களை இறக்கிச் செல்ல போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.