மண்ணச்சநல்லூர் கதிரவனின் பிரச்சார வீரியத்தை குறைக்கும் கழக நிர்வாகிகள்! வெற்றிக்கோட்டை எட்ட வேகமெடுப்பாரா வேட்பாளர்?
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் சீ.கதிரவன் போட்டியிடுகிறார். தொகுதி மக்கள் முன்வைக்கும் அத்தனை கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டிருப்பதாலும், திருச்சியின் திமுக முகமான அமைச்சர் நேருவின் அனுக்கிரகம் இருப்பதாலும், இரண்டாவது முறையாக எம்.எல்.ஏவாகும் வாய்ப்பை திமுக இவருக்கு அளித்திருக்கிறது. கட்சித்தலைமை தந்திருக்கிற வாய்ப்பை கன கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் வேட்பாளர் கதிரவனும், எப்படியாவது இந்த முறை மண்ணச்சநல்லூரில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட வேண்டுமென கடுமையாக உழைக்கிறார். ஆனால் இவரது உழைப்பையும், தொகுதிக்குள் கதிரவனுக்கு இருக்கும் இமேஜையும் நீர்த்துப்போக செய்யும் வேலையை கட்சி நிர்வாகிகள் “சைலண்டாக” செய்து வருகின்றனர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ கதிரவனின் நலன் விரும்பிகள் சிலரிடம் பேசினோம். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது., “எங்கள் அண்ணன் கதிரவன், கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதிக்கு செய்திருக்கும் நலத்திட்டங்கள் ஏராளமென்றால், காசு, பணத்தை பார்க்காமல் கட்சி நிர்வாகிகளுக்கு செய்ததோ தாராளம்.தான் பணக்கார குடும்பத்தில் பிறந்தவன் என்கிற அகந்தையோ, ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ என்கிற பந்தாவோ துளி கூட இல்லாமல் அனைவரிடமும் தோள் மேல் கைபோட்டு பேசுகிற குணம் மிக்கவர். ஆனால் இதை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்ளும் கழக நிர்வாகிகள் சிலர், அவரை தவறாக வழி நடத்துகின்றனர்.தற்போதைய மண்ணச்சநல்லூர் மக்களின் மனநிலை என்ன? மக்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது? என எதையும் வேட்பாளரான கதிரவனிடம் கொண்டு சேர்ப்பதில்லை. மாறாக எலெக்ஷன்ல நீங்க தான் ஜெயிக்க போறீங்கண்ணே. அதை யாராலும் மறுக்க முடியாது என பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே அவரிடம் பகிர்கின்றனர். எம்.எல்.ஏவும் அதை அப்படியே நம்பி விடுகிறார். இப்போதுள்ள கள நிலவரப்படி மண்ணச்சநல்லூர் தொகுதியில் கதிரவன் தான் மீண்டும் ஜெயிப்பார் என்றாலும், 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற அவரது கனவு நிஜமாக கூடுதல் உழைப்பும், களப்பணியும் தொகுதி குறித்த துல்லியமான தகவல்களையும் அவர் தனியாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். கடந்த சில நாட்களாக அவர் மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் எல்லாம் திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களையும், தனது மருத்துவமனையில் மேற்கொள்ளைப்பட்ட இலவச சிகிச்சையால் பயனடைந்ததையும் பேசும் அவர், பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது? அப்பகுதி மக்களின் அடுத்தகட்ட தேவைகள் என்ன? அதற்கு தான் முன்னெடுக்கவுள்ள முயற்சிகள் என்ன? என்பதையும் பேசினால் தானே வாக்காளர்களை கவர முடியும். இது சம்பந்தமான டீ-டெயில் டேட்டாக்கள் எதையும் எம்.எல்.ஏ கதிரவனிடம் அப்பகுதி நிர்வாகிகள் தெரியப்படுத்துவதில்லை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் கோயில் கருவறையில் இருக்கிற சாமியை சப்பரத்தில் அமர்த்தி அலுங்காமல் குலுங்காமல் வீதி உலா செய்து மீண்டும் கோயிலுக்குள் கொண்டு செல்வதை போல கதிரவனை பிரச்சாரத்திற்கு அழைத்து சென்று வருகின்றனர். பிரச்சாரத்தில் ஒவ்வொரு பாயிண்டிலும் நின்று, நிதானித்து, அப்பகுதி மக்களின் “பல்ஸ்” அறிந்து களப்பணியாற்றினால் மட்டுமே கதிரவனின் கனவான 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என்பது சாத்தியமாகும் என்றார். உள்ளதை உள்ளபடி சொன்ன கள நிலவரத்தை கவனத்தில் கொள்வாரா கதிரவன்? என்பதை அவரது வரவிருக்கும் பிரச்சார பாணியே முடிவு செய்யும்.

Comments are closed.