Rock Fort Times
Online News

‘பார்க்கிங்’ பட டைரக்டர் மற்றும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாசுக்கு தேசிய விருது வழங்கி ஜனாதிபதி கவுரவிப்பு…!

71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (23-09-2025) புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார். உலக நாடுகளில் பல்வேறு மொழிகளில் ஆண்டு தோறும் திரைப்படங்கள் வெளியாகும் சிறப்பை கொண்டது இந்திய திரைப்படத்துறை. இதில் பணியாற்றும் கலைஞர்களை கவுரவிக்கும் நோக்கில், ஆண்டு தோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், கடந்த மாதம் வெளியானது. தேர்வான கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா, டில்லியில் இன்று நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இந்த ஆண்டு, ’12வது பெயில்’ திரைப்படம் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த விக்ராந்த் மசாய் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். ‘ஜவான்’ படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார்.1978 முதல் சினிமாவில் 350க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் சிறந்த பிராந்திய திரைப்படம் (தெலுங்கு) பிரிவில் சிறந்த திரைப்பட விருதை பெற்றது. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ். பாஸ்கரும், சிறந்த துணை நடிகைக்கான விருதை ஊர்வசியும் பெற்றனர். சிறந்த தமிழ்ப்படம் மற்றும் திரைக்கதை ஆசிரியருக்கான விருதுகளை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். விலங்கு படத்திற்காக ஹரிஹரன் முரளிதரன் சிறந்த ஒலி வடிவமைப்பு விருதைப் பெற்றார். ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி (திந்தோரா பஜே ரே) திரைப்படத்திற்காக வைபவி மெர்ச்சண்ட் சிறந்த நடன அமைப்பாளர் விருதைப் பெற்றார். தமிழ் சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘பார்க்கிங்’ திரைப்படம் சிறந்த தமிழ் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். அதேபோல், ‘வாத்தி’ படத்திற்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். தி கேரளா ஸ்டோரி படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதைப் பிரசந்தனு மொஹபத்ரா பெற்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்