திருச்சியில் பெய்த கனமழையின் காரணமாக பூங்கா சுவர் இடிந்து விழுந்தது : அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு…! ( வீடியோ இணைப்பு)
தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று மற்றும் வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதேபோல திருச்சியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்றும் திருச்சியில் மாலை சிறிது நேரம் கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்தது. மேலும், கனமழையின் காரணமாக திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம், மகாத்மா காந்தி தெருவில் உள்ள பூங்காவின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில், பொதுமக்கள் யாரும் அந்த வழியாக செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கே.கே.நகர் பகுதி பூங்காக்கள் நிறைந்த பகுதி. மகாத்மா காந்தி பூங்கா தவிர மீதமுள்ள அனைத்து பூங்காக்களும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி பூங்கா நிலை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பாம்பு,தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் உள்ளே செல்ல அச்சப்படு கின்றனர். அதேபோல, எங்கள் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைப்பதற்காக ஜல்லி கொட்டப்பட்டது . இரண்டு ஆண்டு காலம் கடந்தும் புதிய தார்ச் சாலை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினர். அப்போது, இடிந்து விழுந்த பூங்காவின் சுற்றுச்சுவரை பார்க்க வந்த திருச்சி மாநகர உதவி ஆணையர் சண்முகம் இன்னும் ஒரு வார காலத்தில் பூங்கா சீரமைக்கப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்படும் என உறுதிப்பட கூறினார்.
Comments are closed.