Rock Fort Times
Online News

திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் பங்குனி தெப்பத் திருவிழா… * கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவசுவாமி கோவிலுக்கு கர்ப்பிணி பெண்கள் சென்று வழிபட்டால் சுகபிரசவம் கிட்டும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி தெப்பதிருவிழா இன்று(02-04-2025) கொடியேற்றத்துடன் தொடங்கியது, தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார் குழலம்மை அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி தாயுமானசுவாமி சன்னதி வளாகத்தில் உள்ள தங்ககொடி மரத்தின் முன்பு எழுந்தருளிய பிறகு, தங்ககொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்கிட ரிஷப கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் மௌன மடம் கட்டளை தருமபுரம் மாசிலாமாணி சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து இன்று முதல் கற்பக விருட்ச வாகனம், பூத வாகனம், வெள்ளி, ரிஷபம், யானை, தங்க குதிரை ஆகிய வாகனங்களில் நாள்தோறும் தாயுமானவர், மட்டுவார் குழலம்மை சமேதராக வலம் வருவார். தொடர்ந்து ஏப்ரல் 10ம்தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி 5 முறை வலம் வருவார். தொடர்ந்து 11ம்தேதி தீர்த்தவாரியும், இரவு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்