தமிழக அரசின் திட்டங்களை தான் பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன…- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்…!
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், தெற்கு மாவட்டம், காட்டூர் பகுதி கழகம் சார்பில் பாப்பா குறிச்சி செல்லும் சாலையில் உள்ள அண்ணா திடல் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காட்டூர் பகுதி கழக செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான நீலமேகம் தலைமை வகித்தார். 38- வது வட்டக் கழக செயலாளர் தமிழ்மணி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சிறுபான்மையினர் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர், கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், முதல்வரின் சீரிய சிந்தனையில் உதயமான தமிழகத்தின் ஒவ்வொரு திட்டத்தையும் மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.
உதாரணமாக காலை உணவு திட்டம் பற்றி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து அதை தெரிந்து கொண்டு அதை அங்குள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தி வருகின்றனர். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தி உள்ளனர். அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண திட்டத்தையும் பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. குஜராத் மாநிலத்திலிருந்து மருத்துவ பட்டாளமே நமது மாநிலத்திற்கு வருகை புரிந்து நமது மருத்துவ கட்டமைப்பை பார்த்து வியந்து அதை அவர்கள் மாநிலத்தில் பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் முதல்வர்
மு.க.ஸ்டாலினை வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொதுக்கூட்டத்தை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த பொதுக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ், விஜயகுமார், சிவக்குமார், மாமன்ற
உறுப்பினர்கள் செந்தில், கே.கே.கே. கார்த்திக் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், 38-வது வட்டக் கழக செயலாளர் மன்சூர் அலி நன்றி கூறினார்.
Comments are closed.