Rock Fort Times
Online News

பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ்- தற்போதைய சூழலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று அறிவிப்பு…!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு வெளியேறுவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். பண்ருட்டி ராமச்சந்திரன்
கூறுகையில்,

ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவின் உயர்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் எதிர்காலம் குறித்தும், மக்களின் பிரச்சனைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு, 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெற்றிருந்தது. ஆனால், இன்று முதல் அந்தக் கூட்டணியுடன் உறவை முறித்துக் கொண்டது. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் அதன் தலைவர் ஓபிஎஸ் விரைவில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எந்தக் கட்சியினருடன் தற்போதைய சூழலுக்கு கூட்டணி கிடையாது. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் நாடறிந்தது தான். எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எத்தனையோ தேர்தலை தமிழகம் சந்தித்துள்ளது. அந்த வகையில், 2026 தேர்தலும் வரும். அதில், சரியான கூட்டணி, மக்களை சரியான திசையில் வழிநடத்திச் செல்லும் கூட்டணி எதிர்காலத்தில் அமையும் எனக் கூறினார். ஓபிஎஸ் கூறுகையில், ‘சென்னையில் இருக்கும் போது நடைபயிற்சி செய்வது வழக்கம். நடைபயிற்சியின் போது முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தேன், வேறு ஒன்றும் இல்லை என்றார். சமீபத்தில் பிரதமர் மோடி, தமிழகம் வந்திருந்தார். அவர் திருச்சி வந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவரை சந்தித்துப் பேச நேரம் வழங்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் நேரம் கேட்டபோது, அனுமதி வழங்கப்படவில்லை. இந்த வருத்தம் காரணமாகவும், ஏற்கனவே நடந்த சில நிகழ்வுகளாலும் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளதாக தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்