Rock Fort Times
Online News

வக்பு வாரிய மசோதாவிற்கு எதிர்ப்பு…- திருச்சி, தென்னூர் பள்ளிவாசலில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்!

இஸ்லாமியர்கள் தானமாக வழங்கிய சொத்துக்களை பராமரிக்கும் வக்பு சட்டத்தில், ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. அந்த திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக உள்ளதாகவும், இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டி இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அந்த மசோதாவிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. இந்த நிலையில் அனைத்து எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் அது சட்டமாக நடைமுறைக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வக்பு வாரிய புதிய சட்டத்தை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இன்று ( ஏப்.11 ) சிறப்பு தொழுகை முடித்துவிட்டு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி தென்னூர் ஹைரோடு பெரிய பள்ளிவாசலில் தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள் கருப்பு துணியை கையில் ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக பள்ளிவாசலில் மினாரா எனப்படும் தூணில் கருப்புக்கொடி பறக்க விடப்பட்டது.புதிய வக்ஃபு சட்டம் இஸ்லாமியர்களின் சொத்துக்களை திருடும் வகையிலும் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் வகையிலும் உள்ளது. அந்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், இல்லையென்றால் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்