மீன் தீவன மையம் அமைக்க எதிர்ப்பு: திருச்சி மாநகராட்சி கூட்டத்திலிருந்து துணை மேயர், கோட்டத் தலைவர் உட்பட 30 கவுன்சிலர்கள் வெளிநடப்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இந்தநிலையில் குப்பை கிடங்கில் கோழி கழிவுகளை வைத்து மீன் தீவன மையம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குப்பை கிடங்கல் அந்த பணியை மேற்கொள்ள கூடாது என மாநகராட்சி அதிகாரிகளுக்கு திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் அங்கு மீன் தீவனம் தயாரிப்பதற்கான கட்டுமான பணியை துவக்கினர். இந்தநிலையில் இன்று( ஜூலை 31) திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீன் தீவன பணி விவகாரம் குறித்து பேசிய மண்டலம் 3-ன் தலைவர்
மு.மதிவாணன் குப்பை கிடங்கை அரியமங்கலம் பகுதியிலிருந்து அகற்ற வேண்டும், மீன் தீவன மையத்தை அங்கு அமைக்க கூடாது என வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். இதற்கு துணை மேயர் திவ்யா தனக்கோடியும் ஆதரவு தெரிவித்தார். பின்னர் துணை மேயர், கோட்டத் தலைவர் தலைமையில் திமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுன்சிலர்கள், கம்யூனிஸ்ட் கவுன்சிலர் என 30 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் அனைவரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
Comments are closed.