திருச்சி மாநகராட்சியோடு ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு! ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு !
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப திருச்சி மாநகராட்சியோடு அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்ய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கிராம மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி லால்குடி ஒன்றியம் மாடக்குடி ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர்கள் ஜெயசீலன் தலைமையிலும் அல்லித்துறை மற்றும் சோமரசம்பேட்டை ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் சமூக நீதிப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையிலும் பொங்கலூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலர் கார்த்திக் தலைமையிலும் ஒன்று திரண்டு இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் அளித்த மனுவில்,எங்கள் ஊராட்சியில் புஞ்சை மற்றும் நஞ்சை விவசாய நிலங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். விவசாய நிலம் இல்லாதவர்கள் கூலி வேலைக்கு சென்று வாழ்வாதாரத்தை ஓட்டி வருகின்றனர். மாநகராட்சியோடு ஊராட்சிகள் இணைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிடும்.விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். வரி உயர்ந்து எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே சுற்றியுள்ள ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர். திருச்சி மாநகராட்சியோடு ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கிராம மக்கள் ஒரே நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Comments are closed.