சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் 250 நாட்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மொட்டை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து கிராம மக்களின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண் காணித்து வருகிறார்கள்.