அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் இடங்கள் காலியாக கிடக்கின்றன. கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 வருடமாக நீட் தேர்வு முடிவு, பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதத்தால் உயர் கல்விக்கான பொறியியல், மருத்துவ படிப்பு மாணவர்சேர்க்கை தள்ளிப் போனது. கடந்த ஆண்டு நவம்பர் 13ந்தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டதால் சேர்க்கை தாமதமானது. காலி இடங்களை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கமிட்டி புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் பொறியியல் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கட்டணத்தை ஒதுக்கீடு செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மாணவர்கள் கட்டணம் செலுத்தாத இடங்களை காலியாக கருதி அவற்றை ஒரே சுற்றில் ஒதுக்கி நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தநிலையில் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு செப்டம்பர் 15ந்தேதி என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) நிர்ணயித்து உள்ளது .இதனால வருகிற கல்வி ஆண்டுக்கான பொறியியல் கவுன்சிலிங் முன் கூட்டியே தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
