உதகையில் 22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்கா புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆயிரம் வகையான தாவரங்கள், புதர்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மலர்கள், சூரல்கள், மூலிகைகள், போன்சாய்கள் மற்றும் மரங்கள் போன்ற அரியவகை எழில் தாவரங்கள் கண்களுக்கு விருந்தாகும். தாவரவியல் பூங்காவில் மருத்துவ தாவரங்கள், பெரணிகள் என்னும் சூரல்கள் மற்றும் இத்தாலிய பாணியில் அமைக்கப்பட்ட மலர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு புல்வெளிகள் உள்ளன. குறிப்பாக, பிரதான புல்வெளியில் பலதரப்பட்ட மலர்கள், தாவரங்கள், மரங்கள் கொண்ட இந்திய ஒன்றியத்தின் அசத்தும் வடிவமைப்பைக் காணலாம். இப்படி புகழ்பெற்ற உதகை தாவரவியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் ஊதியம் வழங்குவதில் உள்ள பிரச்சனை தொடர்பாக தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் சிலர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையில் பணிபுரியும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும், பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும், தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து 19-வது நாளாக உதகை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுருதி, அனிதா, ஷோபா ஆகிய மூன்று பெண்கள் திடீரென மயக்கமடைந்தனர். அவர்களை, உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால், பூங்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புசாமி, துணை இயக்குநர்கள் சிபிலாமேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து வேளாண்துறை அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை மானிய கோரிக்கையில், மீண்டும் ஊழியர்களின் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் அவர் பேசுவதாக தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், பிற ஊழியர்களையும் பணிக்கு திரும்ப அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், வாக்குறுதிகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக ஊழியர்கள் தெரிவித்து போராட்டம் தொடர்கிறது.
