பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 16ம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்தந்த வட்டார தலைமை அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 18 ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முடிவு செய்தனர். அதன் பிறகும், தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த அமைப்பு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, எஸ்ஐஆர் திருத்தப் பணிகளை அதே நவம்பர் 18ம் தேதி முற்றிலுமாக புறக்கணிப்போம் என வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். பணிக்கு வந்தவர்களின் விவரத்தை 18ம் தேதி காலை 10.15 மணிக்குள் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடந்த 18ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இந்நிலையில், அன்றைய தினம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் 29 ஆயிரத்து 755 பேரும், பள்ளிக் கல்வித் துறையில் 19,967 பேரும் என மொத்தம் 49 ஆயிரத்து 722 பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவருக்கும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளது.

Comments are closed.