ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்…?
த.வெ.க. அரசியல் கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு உள்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் வகுத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். எந்தவொரு கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார். ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார். அந்த அணிகளில் இடம் பெற்று சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்க விஜய் முடிவு செய்துள்ளாராம். நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு அடுத்த மாதம் டிசம்பர் 27- ம் தேதி முதல் மாவட்டம் வாரியாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் சென்னை பனையூரில் இன்று(3-11-2024) நடைபெற இருக்கிறது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்குவார் என்று தெரிகிறது.
கூட்டத்தில்,
– ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானம்
– நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
– கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
– சில மாநிலங்களில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகையில், மத்திய அரசை காரணம் காட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் மாநில அரசுக்கு எதிர்ப்பு
– மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு செய்யப்படும் என்று கூறிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம்
_ கால வரையறை நிர்ணயம் செய்து மது கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் இவை உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed.