சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு- கீழே குதித்து உயிர் தப்பிய பக்தர்கள்… ( வீடியோ இணைப்பு)
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். பின்னர் அவர்கள் வாகனங்களில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். அந்தவகையில் ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஆம்னி பேருந்தில் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இன்று(3-12-2024) மதியம் 12 மணியளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தல் ஆயுதப்படை வளாகம் பகுதியில் ஆம்னி பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்துக்கு உள்ளேயே சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கேஸ் கசிவு ஏற்பட்டு பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே ஐயப்ப பக்தர்கள் பஸ்ஸிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். சற்று நேரத்தில் தீ கொழுந்து விட்டு பேருந்து முழுவதும் பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆம்னி பேருந்து பலத்த சேதம் அடைந்தது. ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.