மணப்பாறை அருகே 3 பவுன் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை: திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினம் நேரில் விசாரணை…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெரிய குளத்துப்பட்டியை சேர்ந்தவர் குழந்தை தெரசு (வயது 65).இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், மகள் அருகில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார். இதனால், வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இரவில் வீட்டின் தாழ்வாரத்தில் தூங்குவாராம். வழக்கம்போல, தாழ்வாரத்தில் கட்டிலில் படுத்திருந்த மூதாட்டி இன்று( ஜூலை 12) காலை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மூதாட்டியின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருந்ததுடன் அவர் அணிந்திருந்த 3 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரெத்தினம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துவக்கப்பட்டது. மூதாட்டியின் சடலத்தை மோப்பமிட்ட பின் அங்குள்ள கல்லறையின் அருகே நின்று கொண்டது. விரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பின்னர், மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.