ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் மாநகராட்சி கோட்ட அலுவலகத்திற்கு கிழக்கில் ராமசாமிபிள்ளை தோட்டம் என்ற இடம் உள்ளது. சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தை ராமசாமிபிள்ளை என்பவர், ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் உற்சவ காலங்களில் அன்னதானம் மற்றும் தண்ணீர்பந்தல் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யும் வகையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆவணப்படுத்தி வைத்திருந்தார். தற்போது அந்த இடத்தை வேறு சிலருக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விட்டு சிலர் அனுபவித்து வந்துள்ளனர். அந்த இடத்தை கோயில் வசம் ஒப்படைக்கும்படி சம்பந்தப்பட்டர்களிடம் கோவில் நிர்வாகத்தினர் கேட்டபோது அவர்கள் சரியானமுறையில் பதிலளிக்கவில்லை. இதையடுத்து கோயில் இடத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கக் கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கோவில் நிலத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. அந்த இடத்தை வாங்கியவர்கள் அங்கு 9 அடுக்கு மாடிகுடியிருப்புகள், இரண்டு தனிவீடுகள், ஒரு ஆஸ்பத்திரி, இரண்டு வணிக வளாகங்கள் போன்றவற்றைக் கட்டி தங்கள் பயன்பாட்டில் வைத்திருந்தனர். கோர்ட் தீர்ப்பின்படி கோவில் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கோர்ட் அமீனாவுடன் வந்து சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி ஆணையர் நிவேதாலெட்சுமி, ஸ்ரீரங்கம்கோவில் இணைஆணையர் மாரியப்பன், வழக்கறிஞர்கள் சீனிவாசன், நாராயணன் மற்றும் கோவில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். அவா்களிடம் அங்கு குடியிருப்பவர்கள், இவ்வளவுகாலம் கடந்தபின் எங்களை காலி செய்யச்சொன்னால் நாங்கள் எங்கு செல்வோம். இந்த இடத்தை விலைகொடுத்து வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளோம். அனைத்துவிதமான வரிகளும் கட்டி வருகிறோம். கோயில் நிர்வாகம் திடீரென இடத்திற்கு உரிமை கோரி வந்தால் ஏற்க முடியாது. எனினும் எங்கள் தரப்பை கோர்ட்டில் தெரிவித்து உரிய நிவாரணம்பெற அவகாசம் கேட்கவுள்ளதாக தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை தற்போது நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும். இந்த வழக்கில் குடியிருப்புவாசிகளான தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என 44பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாாிகள் உாிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நிறுத்தி வைத்தனா். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.