நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8ம் தேதி கடைசி வாய்ப்பு…!
மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும், ஒவ்வொரு மாதமும் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக முதலீடு செய்து ஏமாந்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்ததுடன், இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவன வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது. முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் எனக்கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8ம் தேதி வரை உயர்நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியது. அக்டோபர் 8ம் தேதி வரை புகார் அளிப்பவர்களுக்கு மட்டும் இழந்த தொகை பெற்றுத்தரப்படும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Comments are closed.