தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- நடைபெற்று முடிந்த 15-வது கழக பொதுத்தேர்தலுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டு பதிவு செய்த அனைவருக்கும், ஏற்கனவே தலைமைக்கழகத்தால் உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தலைமைக்கழகத்தில் இருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டினை பெற்றுக்கொண்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், அவரவர்களுக்குரிய உறுப்பினர் சீட்டுக்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகத்தால் பலமுறை அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் பின்னரும் ஒரு சில இடங்களில், ஒரு சில நிர்வாகிகள் இன்று வரை உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என உறுப்பினர்கள் பலர், தலைமைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட “சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்களிடம்” புகாராக தெரிவித்தனர். அது தலைமைக்கழகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. தலைமைக் கழகத்தில் இருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டினை பெற்ற நிர்வாகிகள் யாராக இருப்பினும், அவரவருக்கு உரிய உரிமைச் சீட்டினை, இந்த அறிவிப்பு கண்ட ஒருவார காலத்திற்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கவில்லை என்றால் அவர் மீது தலைமைக் கழகத்திற்கு புகார் வருமேயானால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
