525 அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை: ‘உருட்டு கடை அல்வா’ என திமுகவை கிண்டல் செய்த இபிஎஸ்…!
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இன்றைய( அக்.17) சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். பின்னர், எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் பேட்டியளிக்கும் போது, “2021ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில் 10 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை.அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார்” என்று கூறி, தி.மு.க. உருட்டு கடை அல்வா என்ற பெயரிலான காலி பாக்கெட்டுகளை பத்திரிகையாளர்கள் மத்தியில் காட்டினார். அ.தி.மு.க. உறுப்பினர்களும் அதைபோல் காலி அல்வா பாக்கெட்டுகளை கையில் வைத்திருந்தனர். பத்திரிகையாளர்கள் அதை கேட்டதும், எல்லாத்துக்கும் கொடுங்கப்பா என்று காலி அல்வா பாக்கெட்டுகளை எடப்பாடி பழனிசாமி ஆர்வமாக கொடுத்தார். இதனால், சட்டசபைக்கு வெளியே சிரிப்பலை எழுந்தது.
Comments are closed.