கூட்டணிக்கும் யாரும் வரவில்லை, எடப்பாடி பழனிசாமி பேச்சும் எடுபடவில்லை… * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 3, 16 மற்றும் 35-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் அரியமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதன்மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு அதற்கான சான்றுகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன், வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, வருவாய் கோட்ட அலுவலர் அருள், தாசில்தார் சக்திவேல், உதவி ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன், இளநிலை பொறியாளர் ஜோசப், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நாங்கள் செயல்படுவோம். பள்ளி பொதுத்தேர்வு அட்டவணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டுமென பேசிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால், அவருடைய அழைப்பு நிராகரிக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை என்றார்.
Comments are closed.