Rock Fort Times
Online News

தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள், டேவிட்சன் தேவாசீர்வாதம் உட்பட 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளும், 70 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள சில ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலும் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளரான சத்யபிரதா சாகு, இனி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக செயல்படுவார். இதனால், நில நிர்வாக ஆணையராக இருந்த கே.சு.பழனிசாமி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு செயலாளராக செயல்படுவார். இதன்படி, நில நிர்வாக ஆணையராக கே.சு.பழனிசாமிக்கு பதில், அந்த பொறுப்புக்கு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக இருந்த இரா.கஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக இருந்த கிரண் குராலா, தற்போது முதல் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக செயல்படுவார். இதேபோல மொத்தம் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள்:

இதேபோல தமிழ்நாடு முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆயுதப்படை டிஜிபியாக மாற்றம். சைபர் கிரைம் ஏடிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் டிஜிபியாக பணியை தொடர்வார். மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த பாலநாகதேவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, அதே பொருளாதார குற்றப்பிரிவின் டிஜிபியாக பணியை தொடர்வார். மேலும், கூடுதல் பொறுப்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஜிபி பணி வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஐஜியாக இருந்த அன்புக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி, சிபிசிஐடி ஏடிஜிபியாக பணியை தொடர்வார். தென்மண்டல காவல்துறை ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக மாற்றம். மத்திய அரசின் அயல் பணியில் இருக்கும் தீபக் எம்.தாமோர் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று அங்கேயே பணியை தொடர்வார். மத்திய மண்டல காவல்துறை ஐஜியாக உள்ள செந்தில்குமார் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று தமிழக காவல்துறை தலைமையக பிரிவு ஏடிஜிபியாக மாற்றம். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக உள்ள அனீஷா ஹூசைன் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக மாற்றம். காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக இருந்த நஜ்மல் ஹோடா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று காவல்துறையின் செயலாக்கம் பிரிவு ஏடிஜிபியாக மாற்றம். காவல்துறை தலைமையக பிரிவு ஐஜியாக இருந்த மகேஷ் குமார் ரத்தோட் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, காவலர் நலன் பிரிவு ஏடிஜிபியாக மாற்றம். ஆவடி காவல் ஆணையராக இருந்த சங்கர், சிறைத்துறை ஏடிஜிபியாக மாற்றம். காவல்துறை அமலாக்க பணியகம் ஏடிஜிபியாக இருந்த அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையராக மாற்றம். சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள் தமிழக காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாக மாற்றம். தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோதக், காவல்துறை அமலாக்க பணியகம் ஏடிஜிபியாக மாற்றம். காவல்துறை செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த தினகரன், தமிழ்நாடு காவல்துறை அகாடமி ஏடிஜிபியாக மாற்றம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்