நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நகராட்சி பள்ளி ஒன்றில் கடந்த, 6 ம் தேதி சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதில் 8 ம் வகுப்பு படிக்கும், நான்கு மாணவிகள் மாத்திரைகளை போட்டி போட்டுக்கொண்டு அதிகளவில் உட்கொண்டனர். இதையடுத்து நான்கு மாணவிகளும் மயக்கமடைந்தனர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைகக்காக அவா்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 40 மாத்திரைகளை உட்கொண்ட ஒரு மாணவியின் உடல்நிலை மோசமானது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கல்லீரல் பாதிப்பு இருப்பது தொியவந்ததையடுத்து இன்று மாணவி, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா். இந்நிலையில், சேலம் அருகே சென்று கொண்டிருந்த போது, மாணவிக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். போட்டி போட்டுக்கொண்டு மாணவிகள் மாத்திரை சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை வினியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளாா்.
