பறவைகள் பூங்காவை அடுத்து திருச்சி, கம்பரசம்பேட்டையில் 7 ஏக்கர் பரப்பளவில் நச்சுனு அமையுது வீர தீர சாகச விளையாட்டு மையம்…!
திருச்சியில் பொழுதுபோக்கு அம்சம் உள்ள இடம் எது என்று கேட்டால் டக் என்று ஞாபகத்துக்கு வருவது முக்கொம்பு சுற்றுலா மையம் தான். இங்கு பொதுமக்கள் சென்று அலுத்து போய்விட்டது. மாற்று ஏற்பாடாக வேறு ஏதாவது அமையாதா என்று எதிர்பார்த்த மக்களுக்கு “பறவைகள் பூங்கா” அமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு ஏற்பாடாக திருச்சி கம்பரசம்பேட்டை அருகே 7 ஏக்கர் பரப்பளவில் சாகச விளையாட்டு மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மையம் இளைஞர்கள், நடுத்தர வயதினர் மற்றும் பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும். இது, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப்குமார் கூறுகையில், “கம்பரசம்பேட்டை அருகே 7 ஏக்கர் நிலம் சாகச விளையாட்டு மையம் அமைக்க ஏற்றதாக உள்ளது. இந்த மையம் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்படும். இந்த மையத்தில் பல்வேறு சாகச விளையாட்டு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இளைஞர்கள், மாணவ-மாணவிகள் இந்த விளையாட்டுகளில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் ஒரு நாள் முழுவதும் இங்கு செலவிடலாம். இந்த மையம் திருச்சி பறவைகள் பூங்காவுக்கு அருகில் இருப்பதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த மையத்தில் என்னென்ன விளையாட்டுகள் இருக்கும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், மலையேற்றம், கயிறு பயிற்சி, ஜிப் லைன் போன்ற சாகச விளையாட்டுகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுதவிர, சுற்றுச்சூழல் சார்ந்த சில விளையாட்டுகளும் இடம்பெறலாம். இந்த சாகச விளையாட்டு மைய பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
Comments are closed.