அத்தியாவசியப் பணியில் இருப்பவர்கள் தபால் வாக்களிக்க தமிழக அரசின் புதிய துறைகளைச் சேர்த்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், சேவை வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள வாக்காளர்கள் ஆகியோர் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 60(c)-ன் படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்கைச் செலுத்தலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது. இவர்கள் படிவம் 12D-ஐ பயன்படுத்தி, தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (RO) சமர்ப்பிக்க வேண்டும். வாக்குச் சேகரிக்கும் குழுக்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளைச் சேகரிப்பார்கள். இதற்கான கால அட்டவணை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டு, வேட்பாளர்களுக்கும் பகிரப்படும். அதேபோல், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த தொகுதிகளில் வாக்களிக்க முடியாத சூழலில், தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம். அதற்காக போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகிய துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாக உள்ளன. தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது.

Comments are closed.