தீயணைப்புத் துறையின் சார்பில் நீத்தார் நினைவுநாளை முன்னிட்டு தீயணைப்புத் துறையில் பணியாற்றி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களின் வீர மரணத்தை போற்றும் வகையிலும் தீயணைப்புதுறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நீத்தார் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீத்தார் நினைவுத்தூணில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசியா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து உதவி மாவட்ட அலுவலர்கள் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ், முத்துப்பாண்டி, வெங்கடாசலம், தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர், சத்தியவர்த்தனன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களின் பெயர் விவரங்கள் வாசிக்கப்பட்டதுடன், உயிர் நீத்தவர்களுக்காக தீயணைப்பு படை வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். அதேநேரம் இன்று தொடங்கி ஒரு வார காலம் தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

