சபரிமலைக்கு செல்ல பேருந்து வேண்டுமா?- பக்காவாக பிளான் பண்ணியது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்…!
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களின்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் கடந்த 16-ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்து மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கரூர் பகுதியினர் பயன்பெறும் வகையில் அதிநவீன குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து வருகிற 28-ம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு, சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழுவாகச் செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட தகவல்களுக்கு 94450 14424 மற்றும் 94450 14463 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.