மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து டயர் வெடித்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு- ஒருவர் உயிரிழப்பு, 14 பேர் காயம்…! ( பதை, பதைக்க வைக்கும் வீடியோ)
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இதில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் 39 பயணிகள் என மொத்தம் 41 பேர் பயணம் செய்தனர். அந்த பேருந்தை ஓட்டுனர் ராஜா என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த ஆம்னி பேருந்து நள்ளிரவு சுமார் 1.15 மணியளவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கட்டையை தாண்டி அங்கிருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு சுமார் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால், பேருந்தில் இருந்த ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் சிலர் அலறி அடித்துக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறி உயிர் தப்பினர். சிலர் உள்ளே சிக்கிக்கொண்டு அபயக்குரல் எழுப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அருகில் இருந்தவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள், துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து
சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பஸ் மின்கம்பத்தில் மோதிய வேகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுனர்கள் ராஜா, பாபு மற்றும் பயணிகள் என 14 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தால் சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யாகபுரம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக சென்று வருகின்றன. பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததாலேயே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம், நெடுவிலையைச் சேர்ந்த புஷ்பம் (வயது 62) மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
Comments are closed.