3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்- அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு…!
இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3- வது முறையாக தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற் றது. இதில், என்டிஏ நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, என்டிஏ எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதை ஏற்றுக் கொண்ட திரவுபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று(09-06-2024) இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதேபோல, முதல் கட்டமாக 30 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை, வங்காள தேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வருகை தந்திருந்தனர். மேலும், பாஜக ஆட்சியில் உள்ள மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், பாஜக மூத்த தலைவர்கள், தொழில் அதிபர்கள்,
பங்கேற்றனர். விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திரை பிரபலங்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அக்க்ஷய்குமார், சுரேஷ்கோபி, பவன் கல்யாண், கங்கணா ரணாவத் உள்ளிட்டோரும், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோரும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழகத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
*
Comments are closed.