பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்றார் நயினார் நாகேந்திரன்: அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்…!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அந்தவகையில் எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (13-12-2025) காலை டெல்லி சென்றுள்ளார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் முத்தரையரின் தபால்தலை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பா.ஜ.க, த.மா.கா.உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில், மேலும் சில கட்சிகளை இணைத்து கூட்டணியை பலப்படுத்த அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. டிசம்பர் 15ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில், டெல்லி சென்று அமித் ஷாவை நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேச இருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Comments are closed.