Rock Fort Times
Online News

விஜயை புகழ்ந்து முருகன் பாடல்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் பாடகர் வேல்முருகன்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பக்தி பாடல், நாட்டுப்புற பாடல், தமிழக வெற்றிக் கழக கொள்கை பாடல் ஆகியவை பாடப்பட்டன. விஜயை வாழ்த்தி ஒரு பாடலை பாடகர் வேல்முருகன் பாடினார். மருதமலை மாமணியே முருகையா… என்ற முருகன் பாடலை விஜய்க்காக வேல்முருகன் மாற்றி பாடினார். இது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. முருகன் பாடலை அவமதித்து பாடிய பாடகர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை மாநகரக் காவல்துறையில் வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவர் புகார் அளித்தார். முருக பக்திப் பாடலை அரசியல் ரீதியாகத் திரித்துப் பாடி, முருக பக்தர்கள் மனம் புண்படும்படி நடந்துகொண்ட பாடகர் வேல்முருகன் மற்றும் அவருக்குத் தூண்டுதலாக இருந்த தவெக தலைவர் விஜய், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்தநிலையில் பாடகர் வேல்முருகன் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் யதார்த்தமாக தான் இந்தப் பாடலைப் பாடினேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இந்தப் பாடலைப் பாடியதற்கும், தவெக தலைவர் விஜய்க்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. என் பாடலால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முருகனை அவமதிப்பது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்