இதுவரை 5 பேரை “காவு” வாங்கிய ஸ்ரீரங்கம் ஒய் சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை…!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் விஜய் (வயது25). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர் ஊர் ஊராக சென்று தங்கியிருந்து கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி அருள்மேரி (22). இவர்களது 7 மாத கைக்குழந்தை அந்தோணி ஜோஸ்வா. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் கரும்பு வெட்டும் பணிக்காக, மனைவி அருள்மேரி, மகன் அந்தோணி ஜோஸ்வா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அலெக்ஸ் விஜய் வீட்டிலிருந்து புறப்பட்டார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீரங்கம் ஒய் சாலை சந்திப்பு பகுதியில் வந்தபோது, அவர்களுக்கு பின்னால் வந்த வேன், இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அலெக்ஸ் விஜய், மனைவி மற்றும் குழந்தையுடன் கீழே விழுந்தார். அப்போது அவர்கள் மீது வேன் சக்கரங்கள் ஏறியதில் அருள் மேரியும், குழந்தை அந்தோணி ஜோஸ்வாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அலெக்ஸ் விஜயை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் ஒய் ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த தாய் – மகள், கார் மோதியதில் உயிரிழந்தனர். ஆக, இரண்டு நாட்களில் ஒரே இடத்தில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். இதேபோன்று, இப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு பலர் காயம் அடைந்துள்ளனர். இப்பபகுதியில் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் அங்கு விபத்துகளை தடுக்கும் வகையில் போலீசார், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.