Rock Fort Times
Online News

தாயே…ஆதி மகமாயி…கோஷம் விண்ணதிர இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் மாசித் தேரோட்டம்- ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்…!

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் உள்ள கோவிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால், இங்குள்ள அம்மன் ஆதி மாரியம்மன் என அழைக்கப்படுகிறார். சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல இந்த ஆண்டும் மாசித் திருவிழா கடந்த மாதம் 9 ம் தேதி தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.பின்னர், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.  அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி மாசித் தேர்த் திருவிழா தொடங்கியது. இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் சிம்மம், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முக்கிய நிகழ்வான மாசி தேரோட்ட விழா இன்று(02-03-2025) நடைபெற்றது. இதில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாதாரனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருச்சி, மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தாயே… ஆதி மகமாயி… என பக்தி கோஷம் விண்ணதிர முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இந்த தேரோட்ட விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர், பானகம், தர்பூசணி போன்றவை வழங்கப்பட்டன. சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள், குருக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்