Rock Fort Times
Online News

செல்போன்களுக்கு அழகிகளின் கவர்ச்சி படங்களை அனுப்பி கோடிக்கணக்கில் பண மோசடி!

7 பேர் கும்பல் சிக்கியது..

நாட்டில் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இளம் தலைமுறையினர் பலரும் தற்போது செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். இதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள், நூதன முறையில் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி தான் கோவையில் டேட்டிங் செயலியில் அழகிகளின் கவர்ச்சி படங்களை பதிவிட்டு, பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி கல்லூரி மாணவர்கள் உள்பட பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. அழகிகளின் மீதுள்ள மோகத்தில் பணத்தை இழந்தவர்கள் பலரும் இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மாராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து சிலர் அழகிகளின் கவர்ச்சி படங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி அவர்களின் செல்போன் எண்களை வைத்து மும்பையில் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து நவி மும்பைக்கு சென்ற கோவை சைபர் கிரைம் போலீசார், அங்கிருந்த 7 பேர் கும்பலை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் நவிமும்பை அருகே உள்ள உல்வேயை சேர்ந்த அப்சல் ரகுமான் (வயது 24), விழுப்புரத்தை சேர்ந்த விக்னேஷ் வீரமணி (25), பொள்ளாச்சியை சேர்ந்தவர்களான கர்ணன் (24), தமிழசரன் (23), மணிகண்டன் (22), ஜெயசூர்யா பாண்டியன் (25), பிரேம்குமார் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் மணிகண்டன் என்ஜினீயர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர்களை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதன் விவரம் வருமாறு:- இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஆன்லைன் டேட்டிங் செயலியில் தங்களிடம்   அழகிய இளம்பெண்கள், ஆணழகன்கள் உள்ளனர். பணம் செலுத்தினால் ஜாலியாக இருக்கலாம் என்று கூறி அழகிகளின் கவர்ச்சி புகைப்படங்கள், ஆணழகனின் படங்களை பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்து உள்ளே செல்லும் சபல ஆசாமிகள் அதில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசுவார்கள். இதனை பயன்படுத்தி கொள்ளும் அந்த கும்பல் முதலில் அவர் பேசும் செல்போன் எண்ணின் வாட்ஸ்-அப்பிற்கு சில இளம்பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைப்பார்கள். பின்னர் நீங்கள் இதில் எந்த பெண்ணை விரும்புகிறீர்கள் என்று  சொல்லுங்கள் என்றும் கூறுவார்கள். இதையடுத்து சபல ஆசாமிகள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து தெரிவிப்பார்கள்.  இதையடுத்து தான் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பேரம் பேச ஆரம்பிப்பார்கள். பின்னர்   முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறி, வங்கி கணக்கு எண்ணை அனுப்புவார்கள். இளம் பெண்ணின் மீதுள்ள மோகத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்துவார்கள். கோடிக்கணக்கில் சுருட்டல் பணம் வந்ததும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு ஓட்டலை குறிப்பிட்டு, அங்கு இளம்பெண் உள்ளார் அங்கு செல்லுங்கள் என்று கூறுவர். பணம் செலுத்தியவர்கள் இதனை நம்பி ஆசையோடு அங்கு செல்வார்கள். முதலில் அந்த கும்பலை சேர்ந்தவர்களுக்கு போன் செய்யும்போது, இளம்பெண் பிசியாக இருக்கிறார் காத்திருக்கவும் என்பார்கள். சிறிது நேரத்திற்கு பின் போன் செய்தால் சுவிட்ச் ஆப் என வரும். இதன்பின்னர் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் செல்வார்கள். இவ்வாறு கோவை மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் கல்லூரி மாணவர்கள், சபல ஆசாமிகள் என பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் பல வங்கி கணக்குகள் தொடங்கியுள்ளனர். இதேபோல பல பெயர்களில் சிம் கார்டுகள் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கைதானவர்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.8 லட்சத்து 49 ஆயிரத்து 958 முடக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து 34 செல்போன்கள், 12 வங்கி புத்தகங்கள், 36 சிம்கார்டுகள், 19 ஏ.டி.எம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான 7 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் இதுபோன்று வேறு எங்கு எல்லாம் மோசடியில் ஈடுபட்டனர் என்பதை அறிய போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்