Rock Fort Times
Online News

தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல… வெறும் 0 தான்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆனைக்கு அறம்” என்றால் “குதிரைக்கு குர்ரம்” என்று சொல்வதையும், “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்” வழக்கமாகப் பயன்படுத்தும் தமிழகத்தின் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டவர் என்று கூறினார். அவர், அரசியல் ரீதியாக திமுக கூட்டணியின் செயல்பாடுகளை “கார்பன் காப்பி” போல நகலெடுக்கத் தொடங்கியிருப்பது விலா நோக சிரிக்க வைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 2021 தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் அளித்த 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கும் நிறைவேறவில்லை என்ற உண்மையை மக்கள் தினமும் சொல்லி வருகிறோம் என்றும் அவர் கூறினார். கவர்ச்சிகரமான பெயர்களால் மக்களை ஏமாற்றும் விதமாக, கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் “திமுகவின் உருட்டுக்கடை அல்வா” ஒன்றை தமிழக மக்களிடம் வழங்கியுள்ளதாகவும், மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ அல்லது இணக்கமாகப் பேசியோ, தமிழ்நாட்டிற்கு தேவையான நல்ல திட்டங்களை எடுத்துவர வல்லமை இல்லாத ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஒன்றிய அரசு கேட்டதைத் தரவில்லை என்று வறுத்துக் கூறினார். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு முறையாக திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கத் தவறிய திராணியற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசு, தங்களுடைய இயலாமையை மறைக்க “மத்திய அரசு நிதி வழங்கவில்லை” என்ற போலி கதை சொல்கிறது. ரெயில்வே திட்டங்கள் வரவில்லை என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களுக்கு நிஜமாக அல்வா கொடுக்கும் பம்மாத்து வேலையை அரங்கேற்றி வருகிறது என்று அவர் விமர்சித்தார்.

ஏமாற்று மாடல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் “திமுகவின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும்” என்று ஸ்டாலின் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். “பேஸ்மென்ட் வீக் பில்டிங் ஸ்டிராங்” என்ற படத்தின் நகைச்சுவை காட்சியைப் போல, ஸ்டாலின் ஆட்சியும் “இன்றோ, நாளையோ” என்று ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நிற்கும் ஸ்டாலின் கூக்குரலை மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை ஸ்டாலின் உணர்ந்ததால், அரசியல் ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவது, தரக்குறைவாக பேசுவது, அவர்களை அசிங்கப்படுத்துவது போன்ற செயலை அவர் வழக்கமாக செய்துவருவதாகவும் அவர் கூறினார். “சேற்றிலும், அசிங்கத்திலும் கல் வீசினால் அந்த சேறும், அசிங்கமும் தன்மீதுதான் படும்” என்பதையும், “மல்லாந்து படுத்து எச்சில் துப்பினால் அது தன் மார்பில்தான் விழும்” என்பதையும் ஸ்டாலின் அறிந்திருக்க வேண்டும்; பதவியின் கௌரவத்தையும் மரியாதையையும் நினைத்து செயல்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். “களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் ‘0’ தான்” என்று எடப்பாடி பழனிசாமி முடித்து கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்