Rock Fort Times
Online News

திமுக இளைஞரணி மாநாடு ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமனம்….

திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் வரும் டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தி வருகிறார். மாநாடு குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திமுக ரைடர்ஸ் பிரசாரக் குழு இருசக்கர வாகன பிரச்சார பேரணியை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி மாநாட்டுக்கான ஆலோசனை கூட்டங்களை உதயநிதி நடத்தி வருகிறார்.
திமுகவின் இளைஞரணி செயலாளராக சுமார் 35 ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் இருந்துள்ளார். அப்போது திமுகவின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றதும் நடைபெறும் முதல் மாநில மாநாடு இது என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், திமுக இளைஞரணி மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக இளைஞரணி மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இந்த கூட்டத்தில்   முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டும். 40 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே அது சாத்தியம். இவர்தான் இந்த தொகுதிக்கு என்று எதுவுமில்லை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும். தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

சேலத்தில் வருகிற டிசம்பர் 17-ந்தேதி நடைபெறும் திமுக இளைஞரணி மாநாடு ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவில் சேலம் இளைஞரணி மாநாடு இருக்க வேண்டும். 25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வலுவான படையாக திமுக இளைஞரணி திகழ்கிறது. இளைஞரணி செயலாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பணிகள் பன்மடங்கு வேகம் எடுத்திருக்கின்றன. மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள், பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இனி எந்தக் காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்