தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் அடிப்படையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி உறையூர் மேட்டுத்தெரு அங்கன்வாடி மையத்தில், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து பாலூட்டும் தாய்மார்களுக்கு பேரிச்சம்பழம், நெய் விட்டமின் டானிக், புரதச்சத்து பவுடர், அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் சரவணன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மண்டல குழுத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா மேற்பார்வையில் அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் பெட்டகத்தை வழங்கினார்கள்.
Comments are closed.