திருச்சி தில்லைநகரில் உள்ள கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 815 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது:-
1989 -ம் ஆண்டு, மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி , மாணவ- மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இன்றைக்கு விலையில்லா சைக்கிள் பெற்ற மாணவ-மாணவிகள் சாலையில் கவனமாக செல்ல வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வி துறைக்கு ரூ.39 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார். அதில் கிராம புறங்களில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அரசு வழங்கும் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், பழனியாண்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.