தமிழகத்திற்கு இன்னும் 8 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க அதிமுகவும்
இப்போதில் இருந்தே வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்து வருகின்றன. “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுகவும், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுப்பினர் சேர்க்கையை திமுகவும் கையில் எடுத்துள்ளன. திருச்சி உறையூர் நவாப் தோட்டம் மற்றும் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில்
நேற்று இரவு( ஜூலை 2) “ஓரணியில் தமிழ்நாடு” விளக்க திமுக பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இன்று (ஜூலை 3) கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து உறுப்பினர் சேர்க்கை முகாமை
தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேற்கு தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்த்தோப்பு, தில்லைநகர், பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து அப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர், மேயர் மு.அன்பழகன், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் கேசவன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஏ.கே.அருண், மேற்கு தொகுதி அமைப்பாளர் கோவிந்து, மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா மற்றும் மோகன்தாஸ், கனகராஜ், ராமதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments are closed.