Rock Fort Times
Online News

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விஜய் வாழ்த்து…!

தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று(11-03-2026) தொடங்கியது. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பதிவில், “10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். முதல் பொதுத்தேர்வை எழுதவுள்ளீர்கள். அந்த உற்சாகம் இருக்க வேண்டுமே தவிர, பயமோ, பதற்றமோ இருக்கக்கூடாது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை போலவே இதுவும் ஒரு தேர்வுதான் என்றெண்ணி மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் அன்பு தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வாழ்த்துக்கள். உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல, தேர்வுக் கூடங்களுக்கு வந்த மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்