Rock Fort Times
Online News

பணியின்போது விபத்தில் மரணமடைந்த திருச்சி தலைமை காவலர் குடும்பத்தினருக்கு ரூ. 70 லட்சம் நிவாரண தொகை…

திருச்சி மாநகரம், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் கடந்த 30.07.2023-ந்தேதி திருச்சி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தின் முகப்பில் இரவு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 01.08.2023-ந் தேதி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்கினார். மேலும் தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து பண பலன்களையும் துரிதமாக கிடைப்பதற்கும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இறந்து போன தலைமைகாவலர் ஸ்ரீதர் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி ஐபிஎஸ் , பாரத ஸ்டேட் வங்கியின் Police Salary Package- ன் கீழ் பணியின் போது விபத்தில் உயிர் இறந்தால் வழங்கப்படும் நிவாரணத்தை விரைவாக வழங்க வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி இன்று ( 09.11.2023 )விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ஸ்ரீதரின் குடும்பத்தினரை அழைத்து நிவாரண தொகையான ரூ.70 லட்சத்தை  வழங்கினார். அப்போது அவர் ஸ்ரீதர் குடும்பத்தினரிடம் தங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்து கொடுப்பதாக கூறினார்.
அப்போது திருச்சி மாநகர துணை ஆணையர்(தெற்கு) செல்வகுமார், பாரத ஸ்டேட் வங்கியின் திருச்சி மண்டல துணை பொது மேலாளர் நவீன்குமார், திருச்சி துணை பொது மேலாளர் மதன், திருச்சி முதன்மை வங்கி கிளை துணை பொது மேலாளர் பிரபாகர் பாரிக் ஆகியோர் உடன் இருந்தனர். விபத்தில் உயிாிழந்த  தலைமை காவலா்  ஸ்ரீதருக்கு,  சுமித்ரா என்கிற மனைவியும்,  இந்திாியன்  என்ற மகனும் மற்றும்  இனியா என்ற மகளும்  உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்