Rock Fort Times
Online News

எம்.ஜி.ஆர். கொள்கையை பின்பற்றுபவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்: சொல்கிறார், நயினார் நாகேந்திரன்…!

கள்ளக்குறிச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ரயில் மூலம் நெல்லையிலிருந்து இன்று (24-08-2025) திருச்சி வந்தார். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக- அதிமுக பொருந்தாத கூட்டணி என பலர் பேசி வருகிறார்கள். பாஜக இந்தியா முழுவதும் 1200 எம்.எல்.ஏ.க்களையும், 330 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட கட்சி. பா.ஜ.க -அதிமுக பொருந்தா கூட்டணி என கூறுபவர்களுக்கு எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள், எத்தனை எம்.எல்.ஏக்கள், எத்தனை கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்?. திமுக அரசு மக்கள் விரும்பத்தகாத அரசாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, போதைப் பழக்கம் அதிகரித்து இருப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகள் தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாட்டில் 59 சதவீதம் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. எப்பொழுது தேர்தல் வந்தாலும் வீட்டிற்கு அனுப்பக்கூடிய அரசாங்கமாக திமுக அரசாங்கம் உள்ளது. முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என கூறுவது வதந்தி. தமிழ்நாட்டில் தான் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது. ஜெகதீப் தன்கர் சுதந்திரமாகத்தான் இருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். தேர்தல் முடிந்த பின்பு முதல்வர் யார் என்பது பேசி முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நெல்லையில் அமித் ஷாவின் உரைக்குப் பின்பு எடப்பாடி பழனிசாமி மனவருத்தத்தில் இருக்கிறாரா என்கிற கேள்விக்கு யாரும் மன வருத்தத்தில் இல்லை என்றார். தமிழ்நாட்டிற்கு பிரதமர் இனி அடிக்கடி வருவார்.தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்கக் கூடாது. திமுகவின் ‘பி’ டீமாக பலர் இருக்கிறார்கள். கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா? என்பதில் ஊடகத்தினர் குழப்பிக்கொள்ள வேண்டாம். இதுதொடர்பான கேள்வியை ஊடகத்தினர் இனி கேட்க வேண்டாம். எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான்.  எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளரா என மீண்டும் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆம் என பதில் அளித்தார்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைவார்கள். பலமான கூட்டணி அமைத்து தான் வெற்றி பெற வேண்டும் என அவசியம் இல்லை. நிச்சயமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரும். திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்படும். ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா என்கிற கேள்விக்கு, திமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு எம்ஜிஆர் கொள்கையை பின்பற்றுபவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்