திருவள்ளூரில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை. அணில்களுக்கும் சேர்த்துதான் மரங்களின் மாநாடு. நாட்டுக்காக நிற்பவர்களால்தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டுக்காக நிற்போர் மாநாட்டை நடத்த முடியாது. தண்ணீரை தொடர்ந்து காற்றையும்கூட இவர்கள் விற்பார்கள். டெல்லியை போல தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை குடுவையில் விற்கும் நிலைவரும். காற்று மாசுபட்டு போனதா, இல்லை நாம் காற்றை மாசுபடுத்தி சென்றோமா என யோசித்து செயல்பட வேண்டும். வீசும் நச்சுக்காற்றை மூச்சுக்காற்றாக மாற்றும் மகத்தான பணியை மரங்கள் செய்யும்.பூமியை சமநிலைப்படுத்துவதில் மரங்களின் பங்கு அதிகமானது என்பது அறிஞர்களின் கருத்து. ஒரு மரத்தை நட்டாலே ஆண்களும் தாயாக முடியும். மரம் நம் அன்னை, நம் தாய். மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில் பருவமழை, பெருமழை இல்லை. புயல் மழை மட்டும்தான். புவி வெப்பமாவதுதான் இதற்கு காரணம். பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, ஒரு கட்டத்தில் அதை தாங்க முடியாமல் கடல் பொங்கி கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பில் கடலோர கிராமங்கள் விழுங்கப்படும். ஒரு சுனாமியையே நம்மால் கடந்த காலத்தில் தாங்க முடியவில்லை. இதேநிலை தொடர்ந்தால், பூமி பேரழிவை சந்திக்கும். இவ்வாறு சீமான் பேசினார்.
Comments are closed.