திருச்சி, வயலூர் முருகன் கோவிலில் பக்தரை ஆபாசமான வார்த்தைகளால் வசை பாடிய டி.எஸ்.பி.க்கு மெமோ…!- திருச்சி எஸ்.பி செல்வ நாகரத்தினம் நடவடிக்கை..!
திருச்சி, வயலூர் முருகன் கோவில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். நேற்று (11-04-2025) பங்குனி உத்திரம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பறவை காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசையாக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.ஆனால், ஒரு பக்தர் தனது குடும்பத்தினருடன் வரிசையில் செல்லாமல் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஜீயபுரம் டி.எஸ்.பி.பழனி, குடும்பத்தினருடன் வந்திருந்த அந்த நபரை வரிசையில் வராமல் எதற்காக குறுக்கே வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் ஏதோ சொல்ல ஆத்திரமடைந்த டிஎஸ்பி பழனி, அந்த பக்தரை பார்த்து டேய் போடா… நாயே… நீ என்ன பெரிய… என்று ஆபாசமான வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை அங்கு நின்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் ஒரு பக்தரை அதுவும் கோவில் என்றும் பாராமல் வசை பாடிய டிஎஸ்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை பார்த்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் சம்பந்தப்பட்ட டிஎஸ்பி பழனி, இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மெமோ அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் ஒருவரிடம் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் சுமதி என்பவர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய ஆடியோ வைரலானது. இதுதொடர்பாக அந்தப் பெண் திருச்சி சரக டிஐஜி அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட டிஐஜி வருண்குமார் சம்பந்தப்பட்ட மகளிர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இதுதான் நீங்கள் வேலை பார்க்கும் லட்சணமா… உங்களுக்கு வெட்கமாக இல்லையா… என்று கேள்வி எழுப்பியதோடு சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.