ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் -100 பேர் கைது..
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பல ஆண்டு காலமாக அடிமனை பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளி திருமுத்தம் கிராமத்தில் புதிய பெயரில் பத்திரங்கள் பதிய கூடாது என ஸ்ரீரங்கம் சார்பதிவாளார் அலுவலகத்திலும், மேற்கண்ட பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, வரைபட அனுமதி, கட்டிட நிறைவு சான்று போன்ற எந்த அனுமதி சான்றுகளும் கொடுக்கக் கூடாது என திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திலும், புதிய பெயரில் இந்த பகுதிகளில் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது என ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தலையிட்டு மேற்கண்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் இடங்களை விற்பதற்கும், வங்கியில் வைத்து கடன் பெறுவதற்கும் அல்லது உயில் எழுதவோ, பழைய வீடுகளை இடித்து புனரமைப்பு செய்வதற்கோ முடியாமல் தவித்து வருகின்றனர்.
தேர்தல் நேரங்களில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வாக்கு சேகரிக்கும் போது வேட்பாளர்கள் ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனையை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக தீர்த்து விடுவோம் என்று வாக்குறுதிகளை சொல்லி செல்கின்றனர். ஆனால் இன்று வரை அடிமனை பிரச்சனை தீர்க்க முடியாத பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனவே ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிமனை பிரச்சனையில் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் தலையிட்டு ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களுடன் இணைந்து ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ரெங்கராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் சந்தானம், கிளைசெயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க தலைவர் மோகன்ராம், ஸ்ரீரங்கம் அடிமனை ஒருங்கிணைப்புக்குழு வரதராஜன், மாருதி ராமசாமி, பன்னீர்செல்வம், சின்னகண்ணு உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் உணவு உண்ண மறுத்து திருமணமண்டபத்திலேயே தங்களது உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.



Comments are closed, but trackbacks and pingbacks are open.